Wednesday, March 18, 2009

நெருடல் - 3

பாகம் - 3

நாளை அவள் பிறந்தநாள். ஒரு மாதம் முன்பே எனக்கு பிடித்த உடையும், எனக்கு பிடித்த பரிசு போருளும் அவளுக்கு வாங்கியாயிற்று. அன்று, கடையில் கண்ணாடி பெட்டியில் இருக்கும் 1 டாலர் பொம்மையை ஏக்கமுடம் கேட்கிறாள். பொய்யாக ஒரு சாக்கு சொல்லி சமாதானம் செய்கிறேன். அவள் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏக்கத்தோடு எனக்காய் பலடாலர் பொருளுக்கு தலை ஆட்டுகிறாள். இரவு கதை படிக்கிறேன். கதையின் பொருளாக அதிகம் ஆசைப்படாதே என்று அறிவுறுத்துகிறேன். கடையில் நடந்த நிகழ்ச்சி எண்ணி பார்க்கிறாள். ஒரு சின்ன பொம்மையிடம் ஆசை கொண்டேன், அம்மா விரும்பி வாங்கி தந்தது பெரிய பரிசு பொருள். எதை ஏற்று கொள்வது அம்மாவின் எண்ணத்தையா இல்லை கதையின் பொருளையா? குழப்பம் கொள்கிறாள்.

என்னிடம் என்ன எதிர்பார்க்கும்? என் குழந்தை என்று எண்ணி பார்க்கும் நாட்கள் மிக மிககுறைவு. என் எதிர்பார்ப்புகளை அவளிடம் புகுத்த தெரிந்த எனக்கு அவள் எதிர்பார்புகளை ஏற்க தெரியவில்லை என்று கூறுவது அபத்தம். என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்பது தான் உண்மை. அவளுக்கு பிடித்த சமையல் செய்து அருகில் அமர்ந்து கதை சொல்லி கொஞ்சி குலாவி ஊட்டி விட எதிர்பார்ப்பால். கறிகாய் சேர்க்க எண்ணி எதோ என்று ஒரு சாதம் கூட்டு வைத்து அதை அதட்டியும் மிரட்டியும் உண்ண வைக்கிறேன். என் மனதில் அடுத்து குவிந்து கிடக்கும் வேலைகள் அடுக்காய் வர உணவு ஊட்டும் உற்சாகம் குறைந்து விடுகிறது. அவளுக்காக அழகாய் செய்யும் இந்த வேலை கூட பாரமாய் பெரிதாய் தோன்றுகிறது.

கண்மூடி என்னையே ஆராய்ந்து பார்கிறேன். உள்ளொன்றும், புறமொன்றும் என இரு எண்ணங்களுடன் வாழும் நான் எப்படி என் மகளுக்கு உதாரணம் ஆவேன். குழந்தைகள் அப்படி அல்ல மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளியில் கூறும். அதை அங்கிகரிகாமல் நான் நினைப்பதை நீ நினைக்க வேண்டும் என தள்ளப்படும் பொது குணம் மாறுகிறாள். இரு எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறாள், அவளுக்காகவும் அவள் அன்னைகாகவும். எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையில் அவள் நல்லவள் ஆவதும் கேட்டவள் ஆவதும் அன்னை வளர்ப்பினில் பாடல் என் செவியில் ஒலிக்கிறது.

பிறர் மீது கொண்ட கோபம் குழந்தைகள் மீது பாயும் வழக்கம் காலமாய் இருக்கும் கொடுமை. கோபம் மதியற்றோர் செய்யும் பாவம். குழந்தைகள் செய்வது, அறியாது செய்யும் தவறு. நாம் செய்வது, அறிந்து செய்யும் தவறு.தெரியாமல் செய்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறு. குழந்தைகள் நமக்கு கிடைத்த வரம், பொம்மை பொருளாய் ஆட்டி வைப்பதை எண்ணி வெட்கம் கொள்கிறேன். சிறு சிறு செயல்களில் செய்யும் தவறு கூட ஒரு குழந்தையின் மனதை மாற்றும் என நாம் நினைவில் கொள்ள மறக்கிறோம். நல்ல கருத்துகளை போதிக்க வேண்டும். அதை விட சிறந்தது நல்ல கருத்துகளாய் நாம் வாழ்ந்து காட்டுவது. புத்தக படிப்பு அறிவை வளர்ப்பது. அதை மட்டும் கருத்தில் கொண்டால் நாம் செய்வது தவறு. நல்லறிவு நற்செயல்களால் மட்டுமே வளரும். நற்செயல்களை கற்று கொள்வது நம்மிடமே.

மனதை நெருடி கொண்டிருக்கும் எண்ணங்களை எழுத எண்ணி முடிவில்லா கட்டுரையாய் நீண்டு கொண்டிருக்கிறது. உண்மையை உணர்ந்து எண்ணங்களை நேர்படுத்தி, என் செயல்களை மாற்றி கொள்ள ஒரு வாய்ப்பாய் இவ்வெழுத்துகள் அமையுமாயின், அது என் எழுதுகோலுக்கு கிடைத்த வெற்றி. தொடரும் இந்த நெருடல் ஒரு முடிவை காணும் வரை.............


Tuesday, March 17, 2009

ஏழை விவசாயி

ஏழு காணி நிலம் கொண்டு
எருதிரண்டு ஏர் பூட்டி

தொட்டதெல்லாம் துலங்க வேண்டி
குலதெய்வம் பொங்கலிட்டு

ஊர் கம்மா நீர்ரிரைத்து
உழுது உரம் தான் போட்டு

கட்டினவள் கழுத்து தாலி
பத்து வட்டி கடன் பட்டு

வாய கட்டி வயத்த கட்டி
வாங்கியாந்த விதை நெல்லில்

பாத்தி கட்டி நாத்து நட்டு
பதமாய் நிதம் செப்பனிட்டு

ஈர துணிப் பசியாற்ற
இரவுபகல் பாடு பட்டு

பார்த்த விளைச்சல் பொன்னி
தம்பி உன் பசியாற்ற எண்ணி

பலர் பட்டணத்து பகட்டுக்காக
பாதி சோறு மீதியாக்க

இங்கே, பாடுபட்ட கூலிக்காரன்
பெத்த வயிறு பட்டினியாய்

விருந்து எனும் வேட்கை கொண்டு
விரயம் செய்யும் மானிடரோ

மருந்து இன்றி சரிந்து விழும்
மாந்தர் தம்மை காண்பாரோ

ஏற்றம் வேண்டி ஏங்கி நிற்கும்
ஏழை அவன் வாழ்க்கை மட்டும்

என்றும் மாற்றம் இன்றி மரித்து
போகும் அவல நிலை மாறிடுமோ............................. 


 

Thursday, January 22, 2009

நெருடல் - 2

பாகம் - 2

காலையில் எழுந்ததும் அதே கோபம், வேகம் மனதில் நேற்று நினைத்தது மறைந்து போய் மீண்டும் சாத்தான் குடிகொள்கிறது. எங்கோ தவறு செய்கின்றேன். பொன்னான நேரத்தை சரியாக செலவிடத் தெரியவில்லை. அமேரிக்கா வந்ததன் நோக்கம் இன்று பணம் என்று ஆகிவிட்டது, ஆனால் அதிலும் கவனம் இல்லை. வங்கி கணக்கு எறவில்லை. நான் பெற்ற சந்தோஷம், எனக்கு கிடைத்த குழந்தை பருவம் என் மகளுக்கும் கிடைக்க வேண்டும். எல்லாம் யோசித்து பார்த்தால் நான் வேலையை விட வேண்டும். ஆனால் அது சரியான முடிவாக இருக்காது.அலுப்பில் வந்த கோபம் இனி சலிப்பில் வரும். இதில் மாற்றம் ஒன்றும் இருக்காது. யோசனைகள் பல வரும், ஆனால் அதை செயலாக்க தீர்க்கமான மனம் வேண்டும்.

என்றோ நடந்த குழந்தை பருவத்தை நினைத்து பரவசமாகும் இந்த மனம் ஏன் என் குழந்தை செய்யும் குட்டி குறும்பில் தெரியவில்லை. எந்திரமாகி போனது வாழ்க்கை மட்டும்மல்ல என் மனமும் தான்.சின்ன சின்ன சந்தோஷங்களை காண மறுக்கிறது. எதிலும் ஒரு கட்டுபாடு. எதிலும் ஒரு விதிமுறை. நீ இது செய்தால் எனக்கு சந்தோஷம். அது செய்தால் எனக்கு சந்தோஷம். உன்னை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்யாமல், என்னை சந்தோஷபடுத்த செயல்கள் செய்கிறாய். அதை ஏன் மாற்றி நான் செய்யக் கூடாது?

என்னிடம் அடி வாங்கிய அன்று மாலை பரிவோடு குழந்தையிடம் கேட்கிறேன் "அம்மா அடிச்சுடேனா? ரொம்ப வலிச்சதா நீ வேணா அம்மாவ திரும்ப அடிச்சுக்கோ" (பலி தீர்க்க கற்று தருகிறேன்). அவளோ என்னை கட்டியனைத்துக் கொண்டு " மம்மீ ஐ லவ் யூ. ஐ வோன்ட் ஹர்ட் யூ" என்கிறாள். எண்ணி பார்த்தால்மனம் பாரமாகி போய் கண்கள் நீர் சுரக்கிறது. பலவாறு யோசித்து தீர்வு காணத் துடிக்கிறது. பலர் வியக்கலாம் மனிதனுக்கு யோசிக்க பெரிய பெரிய பிரச்சனைகள் இருக்க இந்த சிறிய விசயத்திர்க்கு உலத்தி கொண்டிருப்பதாய். ஆழ்ந்து யோசித்தால் உலகின் அணைத்து சச்சரவுகளுக்கும் இதுவை விதையாய் இருக்கும்.

என்னிடம் கற்றுகொண்டது தான் நாளை அவளிடம் வெளிவரும். என் அன்பான பேச்சு அவளை அன்பாய் பேச வைக்கும். 100 மதிப்பென் எடுத்தால் மட்டுமே எனக்கு சந்தோஷம் என்றில்லாமல், நீ படித்து விசயங்கள் தெரிந்து கொண்டாலே நான் மிகவும் மகிழ்வேன் என்று உணர்த்தினால் என்ன? குழந்தையின் சந்தோஷம்.. அவள் உணர்ச்சி, அவள் உரிமை. அதையும் நான் எனக்குள் அடக்கினால் அது கொடுமை. அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று உணர்ந்து வரும் நம் சந்தோஷத்திர்க்கு ஈடு இனை ஏது. குழந்தை பிறர் கண்ணுக்கு அழகாய் தெரியவேண்டும், பிறர் போற்ற வாழ வேண்டும், பிறர் மதிக்க உயரவேண்டும் என்று மனம் பிறர் பற்றி யோசித்து யோசித்து என் உறவை பற்றி யோசிக்க மறந்தேன்.

நான் தாய், நான் உனது நல்லதை மற்றுமே நினைப்பேன். என் சொல்லை கேட்டு நீ நடக்க வேண்டும். என்ன ஒரு அடிமைத்தனத்தை விதைக்கிறோம். இயலாமல் என்னிடம் அடங்கி போகிறாள். அவள் மனம் யோசிக்கிறது, இந்த அடிமைத்தனம் பிடிக்கவில்லை. கோபம் கொள்கிறாள்.அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவள் மனதை இந்த சிரிய வயதில் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறாள். நான் புரிவது இங்கே கொடுமை அல்லவா? கற்று தருகிறேன் என்கிற பொழுதே என்னை அறியாமல் என்னுள் சுயநலமும், தலைகனமும், ஆணவமும் குடிகொள்கிறது. நான் சொல்வது அனைத்தும் சரியன நினைக்கிறது மனம். எது நல்லது எது கெட்டது என்று அவளை சிந்திக்க விடாமல், இதுதான் நல்லது என்று தீர்மானிக்கிறது என் மனம். அது தவறாக இருந்தாழும் ஏற்றுகொள்ள மறுக்கிறது.

தொடரும் பல உவமைகளுடன்.....Wednesday, January 21, 2009

நெருடல் - 1

பாகம் - 1
அலுவலகம் விட்டுச் செல்ல இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். மனம் யோசித்தது இன்று இரவு சமையல் பற்றி, ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் செல்ல மகளின் முகம் என் கண்முன் நிற்க, காலையில் நடந்த சம்பவம் என் நினைவுகளில். நேற்று இரவு தூக்கம் தள்ளி போனதால் காலையில் எழுந்திருக்க முடியவில்லை. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது, சாப்பிட மறுக்கும் மகள், மதிய உணவு எடுத்து வைக்க வேண்டும், வேறு உடை மாற்றி அவளுக்கு தலை சீவ வேண்டும். நேற்று தாமதமாகச் சென்றதால், மேலாளர் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. ஒத்துழைக்க மறுத்ததால் ஓங்கி ஒரு அடி அவள் முதுகில் விளத் தேம்பிக் கொண்டே என்னை கட்டி அணைக்கிறாள்.

யார் மீது வரும் அச்சமோ கோபமோ எதிர்க் கொள்ள இயலாத இந்த பிஞ்சுமன் மீது பாய்கிறது. இப்போது நினைத்து வருந்துகிறேன். குறைகள் யாவும் என்னிடம் இருக்க கோபம் மட்டும் உன்னிடம். கண்கள் கலங்குகின்றன, என் செயலை எண்ணி வெட்கம் கொள்கிறேன். மணி 5.00 யை எட்டியது, கார் சாவியை எடுத்து கொண்டு கையில் ஒரு சாக்லைட்டுடன் கிளம்புகிறேன் மகளை சமாதானம் செய்ய மீண்டும் ஒரு தவறு என் செயலில். அவள் கேட்கும் போது ஜங்க் உணவான இந்த சாக்லைட் என் சுயநலத்திற்கு நல்லதாகிறது. நினைத்து கொள்கிறேன், நான் செய்யும் எந்த செயலில் சுயநலம் இல்லை. விரல்விட்டு கூட எண்ண முடியவில்லை ஏன்னென்றால் எண்ணுவதற்கு ஒன்றும் இல்லை. என் குழந்தை என்னிடம் என்ன கற்றுக் கொள்கிறது? நினைத்து பார்த்து விம்முகிறேன்.

டேக்கேர் வந்துவிட்டது, 5 வயது வரை பாலூட்டி தாலாட்டி வளர்த்த காலம் போய் 2 வயதில் பள்ளி செல்லும் நிலமை இந்த கால குழந்தைகளுக்கு. ஆவலுடன் உள்ளேச் செல்கிறேன். கள்ளம் கபடமற்ற குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து "டோரா கார்ட்டுன்" பார்த்து கொண்டு இருக்கின்றன. அதில் வரும் ஷ்வைப்பர் எனும் நரியைக் கண்டு முகம் சுளிக்கின்றன. எங்கோ படித்ததை நினைவில் கொள்கிறேன் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். வாழ்வில் சிறந்த பண்பாடுடையவன் மிகுந்த ஒழுக்கமுடையவன் திரைப்படத்தில் வில்லனாகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான். கதாநாயகன் கடைந்தெடுத்த அயோக்கியனாய் இருந்தும் கன்னியவான் ஆகின்றான். நம் மனம் செயல்களை, காட்சிகளை எடுத்துக் கொள்ளும் விதம் கண்டு வியப்படைகின்றேன்.

உள்ளுக்குள் அன்பும், பாசமும் கொட்டிக்கிடந்தும் நான் வெளியில் நடக்கும் விதம் என் மகள் மனதில் என்னை வில்லனாக்கும். என் மகளிடம் கதாநாயகன் ஆக வேண்டும், திரைப்படத்தில் வருவது போல் அல்லாமல் உள்ளுணர்வால், உயர்ந்த செயலால். பெயர் சொல்லி அழைக்கிறேன், அம்மா என்று ஓடி வரும் அவள் சிரிப்பில் மயங்கி நிற்கிறேன். காலை நிகழ்ச்சியை மறந்து விட்டாள். இந்தவொரு நல்ல குழந்தையை என் செயல்களால் கெடுத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு மனதில் முள்ளாய் குத்துகிறது. என்னுள் உதித்த ஒரு ஜீவனுக்கே இந்த கதி என்றால், பிறருக்கு என்னிடம் இருந்து என்ன செல்கிறது? திருட்டு, கொள்ளை, கொலை தான் குற்றங்களா? நானும் தவறு செய்கிறேன். சமுதாயத்திடம் திருடுகிறேன், பலர் உள்ளங்களைக் காயப்படுத்துகிறேன், நல்லுணர்வுகளை கொலை செய்கின்றேன்.

வீட்டிற்கு வந்தாயிற்று. பால் குடுத்து விட்டு இரவு உணவை செய்ய ஆரம்பிக்கிறேன். அவளோ ஓடி ஆட வேண்டிய வயதில் துணையின்றி தொலைக்காட்சியில் மூழ்குகிறால். என்னை சமைக்கும் வரை தொந்தரவு செய்யாதிருந்தால் சரியென்று வேலையை ஆரம்பிக்கிறேன். பாத்திரங்களை கழுவி, தேநீர் போட்டு, சாதம் வைத்து ஒரு கூட்டு, குழம்பு வைத்தாயிற்று. மணி 7.30 சாதம் கலந்து எடுத்துக் கொண்டு ஊட்ட செல்கிறேன். வழக்கம் போல் மறுக்கும் அவள். விளையாட்டு காட்டி, கொஞ்சியும் மிரட்டியும் ஊட்டி முடிக்கிறேன். அவர் வந்தாயிற்று, இருவரும் சேர்ந்து இரவு சாப்பாட்டை முடித்து, மீண்டும் ஒதுங்க வைத்து விட்டு வருவதர்க்குள் உறங்கி போகிறாள். வேலையின் அலுப்பு தலை வலிக்கின்றது. ஒரு கப் டீயுடன் சிறிது TV பார்க்கிறேன். அவர் வழக்கம் போல் லேப்டாபில் உலகச்செய்திகளை ஆராய்கிறார். மீண்டும் இரவு தூக்கம் தள்ளி போகிறது. வார நாட்களில் நேரம் இல்லாதது போன்று ஒரு உணர்வு. சனி, ஞாயிறு நன்றாய் ஓய்வு எடுக்க வேண்டும். வெள்ளி இரவே துணி துவைத்து மடித்து வைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே தூங்கி போகிறேன்.


தொடரும்..........


Thursday, January 15, 2009

10 நிமிட எண்ணங்கள்

10 நிமிட எண்ணங்கள்
அழகான மாலை வெயில்........ சூரியன் தன் ஒளியால் வானை அழகு படுத்த, பரபரக்கும் சாலையில் நானும் ஒரு ஜீவனாய் காரை ட்ரைவ் செய்து கொண்டிருக்கிறேன். என் மனமோ தனியான ஓர் ஓட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. செவ்வானத்தில் சூரியன் மறையும் அழகை முழுதாக ரசிக்க இயலாமல் முன்னே செல்லும் கார் மீது ஒரு கவனம், சைட் மிரர்ரில் ஒரு எண்ணம், பின்னால் வரும் ட்ரக் மீது ஒரு எண்ணம், ஆடியோ ப்ளேயரில் ஓடும் இளயராஜா வின் இசையில் ஒரு கவனம், திடிர்ரென்று எஷ்இட் டை மிஸ் செய்து விடுவேனோ ரைட் லேன் செல்ல வெண்டும் என்று ஒரு எண்ணம், வீட்டிற்கு சென்ற பின் காத்திருக்கும் வேலைகளில் ஒரு எண்ணம் என்று இந்த 10 நிமிட ட்ரைவில் ஓராயிரம் எண்ணங்கள் சில நேரங்களில் எண்ணிலடங்காது நம் எண்ணங்கள்.

இந்த எண்ணங்களுடன் விடைத்தேடி விசித்திரமாய் உதிக்கிறது கடவுள் இவ்வுலகை என்று படைத்தான்? என்ற ஓர் எண்ணம், விடை காண மனம் நாட உதிக்கிறது இன்னொரு எண்ணம் ஏன் படைத்தான்? என கேள்வியாய். விஞ்ஞானம், மெஞ்ஞானம் என விளக்கம் தேடி அலைகின்றது. அழகாய் பல உயிர்கள் படைத்து அதில் ஆண் பெண் என இரு வகை படுத்தி அவருல் காதல் எனும் உணர்வை ஊற்றி அடுத்து அடுத்து ஜீவன் படைத்தான். முடிவில்லா அவன் படைப்பில் முற்றுப்புள்ளி வைக்க மறந்தானா இல்லை முற்று புள்ளி தான் வைத்து, நாம் காண மறைத்து வைத்தானா? வாழ்க்கை இதை வாழ்ந்து பார்ப்போம் என்ற எண்ணம் இருந்தாழும், ஏன்? எப்படி? என்ற கேள்வி எழுகிறது என்னுள்.

ஒவ்வொரு பகுதியாய் நான் வாழும் வாழ்க்கையில் விடை காண எண்ணுகிறேன். இது தான் வாழ்கை என்று என்னால் கூற இயலவில்லை. பெற்றோருக்கு மகளாய் வாழ்ந்த வாழ்க்கை தான் முழுமையான வாழ்கையா? சொந்தம் என்ற கூட்டுக்குள் சுகம் கண்ட வாழ்க்கை தான் தேடி செல்லும் வாழ்க்கையா? நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிவோர், எனை கண்டோர், காணோதோர், நான் பார்த்தோர், பார்க்காதோர், என்னற்ற உயிரினங்கள், உயிரற்ற பல இனங்கள் என்று அவன் படைத்த பலவற்றுடன் விரும்பியும் விரும்பாமலும் வாழ்கின்ற இவ்வாழ்க்கை தான் முழுமையானது என்று ஏற்று கொள்ள இயலவில்லை. மனம் ஏனோ அதை ஒரு பகுதியாய் தான் எண்ணுகிறது. இதை மறுத்திடும் வகையில் வேறோரு எண்ணமும் கூட......

நான் கடந்து வந்த கடக்கப் போகிற இந்த பாதை தான் வாழ்க்கை. வரையறுக்கப்பட்ட வாழ்க்கை! ஆனால் நான் தான் முழுமைப்படுத்த தவறிவிட்டேனோ எனத் தோன்றும் ஓர் எண்ணம். நினைத்து பார்க்கிறேன்..... இந்த செயல் என்னை முழுமைப்படுத்தியது என்று கூற 30 ஆண்டுகள் ஆகியும் முடியவில்லை. சிறியதோர் எடுத்துக்காட்டாய் மதிய உணவாக விரும்பிய உணவகத்தில் ஒரு ஃபுல் மீல்ஸ், வயிறு முட்ட ஒரு கட்டு கட்டியாயிற்று. அதன் சந்தோஷத்தை மனம் முழுமையாய் ஏற்காமல், இரவு ஒன்றும் வேண்டாம் டயட் ஒரு டம்ளர் பால் போதும் என்று யோசிக்கிறது. முழுமை தொலைந்து போகிறது அந்த நிமிடத்தில்!

வெளி உலகிற்கு, தோற்றத்திற்கு, பேச்சிருக்கு, நடவடிக்கைக்கு பழக்கவழக்கம் என்று ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உள் மனதில் தோன்றும் எண்ணங்கள் இந்த பழக்கதிற்க்கும் வழக்கத்திற்கும் அடங்காமல் செல்கிற போது இரு வாழ்க்கை வாழ்வதாய் தோன்றுகிறது. என்னுள் சிரித்து ஆக்ரோஷம் போட்டு கொண்டு இருக்கும் எண்ணங்களுடன் பிறர் அறியாத ஒர் வாழ்க்கையும் வெளி உலகிற்கு என்று பழக்கவழக்கத்துடன் ஒர் வாழ்கையும் வாழ்வதாய் தோன்றுகிறது. தோன்றும் எண்ணங்களுக்கும் ஒரு வரையரை வேண்டும், கட்டுபாடு வேண்டும். அதை மகிழ்வோடு ஏற்று மனம் நினைக்க வேண்டும். முழுமையை உணர என்னுள் உதிக்கும் எண்ணங்களை எனக்குள் கட்டுபடுத்த வேண்டும் என்று ஒர் எண்ணம் போதனையாய் செவியில் ஒலித்து கொண்டிருக்கிக்க, காரை பார்க் செய்து விட்டு தெளிவில்லா விடையுடன் வீட்டை அடைகிறேன்.

மீண்டும் பல எண்ணங்களுடன் தொடரும் என் உளரல்கள் ....