Thursday, January 15, 2009

10 நிமிட எண்ணங்கள்

10 நிமிட எண்ணங்கள்
அழகான மாலை வெயில்........ சூரியன் தன் ஒளியால் வானை அழகு படுத்த, பரபரக்கும் சாலையில் நானும் ஒரு ஜீவனாய் காரை ட்ரைவ் செய்து கொண்டிருக்கிறேன். என் மனமோ தனியான ஓர் ஓட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. செவ்வானத்தில் சூரியன் மறையும் அழகை முழுதாக ரசிக்க இயலாமல் முன்னே செல்லும் கார் மீது ஒரு கவனம், சைட் மிரர்ரில் ஒரு எண்ணம், பின்னால் வரும் ட்ரக் மீது ஒரு எண்ணம், ஆடியோ ப்ளேயரில் ஓடும் இளயராஜா வின் இசையில் ஒரு கவனம், திடிர்ரென்று எஷ்இட் டை மிஸ் செய்து விடுவேனோ ரைட் லேன் செல்ல வெண்டும் என்று ஒரு எண்ணம், வீட்டிற்கு சென்ற பின் காத்திருக்கும் வேலைகளில் ஒரு எண்ணம் என்று இந்த 10 நிமிட ட்ரைவில் ஓராயிரம் எண்ணங்கள் சில நேரங்களில் எண்ணிலடங்காது நம் எண்ணங்கள்.

இந்த எண்ணங்களுடன் விடைத்தேடி விசித்திரமாய் உதிக்கிறது கடவுள் இவ்வுலகை என்று படைத்தான்? என்ற ஓர் எண்ணம், விடை காண மனம் நாட உதிக்கிறது இன்னொரு எண்ணம் ஏன் படைத்தான்? என கேள்வியாய். விஞ்ஞானம், மெஞ்ஞானம் என விளக்கம் தேடி அலைகின்றது. அழகாய் பல உயிர்கள் படைத்து அதில் ஆண் பெண் என இரு வகை படுத்தி அவருல் காதல் எனும் உணர்வை ஊற்றி அடுத்து அடுத்து ஜீவன் படைத்தான். முடிவில்லா அவன் படைப்பில் முற்றுப்புள்ளி வைக்க மறந்தானா இல்லை முற்று புள்ளி தான் வைத்து, நாம் காண மறைத்து வைத்தானா? வாழ்க்கை இதை வாழ்ந்து பார்ப்போம் என்ற எண்ணம் இருந்தாழும், ஏன்? எப்படி? என்ற கேள்வி எழுகிறது என்னுள்.

ஒவ்வொரு பகுதியாய் நான் வாழும் வாழ்க்கையில் விடை காண எண்ணுகிறேன். இது தான் வாழ்கை என்று என்னால் கூற இயலவில்லை. பெற்றோருக்கு மகளாய் வாழ்ந்த வாழ்க்கை தான் முழுமையான வாழ்கையா? சொந்தம் என்ற கூட்டுக்குள் சுகம் கண்ட வாழ்க்கை தான் தேடி செல்லும் வாழ்க்கையா? நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிவோர், எனை கண்டோர், காணோதோர், நான் பார்த்தோர், பார்க்காதோர், என்னற்ற உயிரினங்கள், உயிரற்ற பல இனங்கள் என்று அவன் படைத்த பலவற்றுடன் விரும்பியும் விரும்பாமலும் வாழ்கின்ற இவ்வாழ்க்கை தான் முழுமையானது என்று ஏற்று கொள்ள இயலவில்லை. மனம் ஏனோ அதை ஒரு பகுதியாய் தான் எண்ணுகிறது. இதை மறுத்திடும் வகையில் வேறோரு எண்ணமும் கூட......

நான் கடந்து வந்த கடக்கப் போகிற இந்த பாதை தான் வாழ்க்கை. வரையறுக்கப்பட்ட வாழ்க்கை! ஆனால் நான் தான் முழுமைப்படுத்த தவறிவிட்டேனோ எனத் தோன்றும் ஓர் எண்ணம். நினைத்து பார்க்கிறேன்..... இந்த செயல் என்னை முழுமைப்படுத்தியது என்று கூற 30 ஆண்டுகள் ஆகியும் முடியவில்லை. சிறியதோர் எடுத்துக்காட்டாய் மதிய உணவாக விரும்பிய உணவகத்தில் ஒரு ஃபுல் மீல்ஸ், வயிறு முட்ட ஒரு கட்டு கட்டியாயிற்று. அதன் சந்தோஷத்தை மனம் முழுமையாய் ஏற்காமல், இரவு ஒன்றும் வேண்டாம் டயட் ஒரு டம்ளர் பால் போதும் என்று யோசிக்கிறது. முழுமை தொலைந்து போகிறது அந்த நிமிடத்தில்!

வெளி உலகிற்கு, தோற்றத்திற்கு, பேச்சிருக்கு, நடவடிக்கைக்கு பழக்கவழக்கம் என்று ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உள் மனதில் தோன்றும் எண்ணங்கள் இந்த பழக்கதிற்க்கும் வழக்கத்திற்கும் அடங்காமல் செல்கிற போது இரு வாழ்க்கை வாழ்வதாய் தோன்றுகிறது. என்னுள் சிரித்து ஆக்ரோஷம் போட்டு கொண்டு இருக்கும் எண்ணங்களுடன் பிறர் அறியாத ஒர் வாழ்க்கையும் வெளி உலகிற்கு என்று பழக்கவழக்கத்துடன் ஒர் வாழ்கையும் வாழ்வதாய் தோன்றுகிறது. தோன்றும் எண்ணங்களுக்கும் ஒரு வரையரை வேண்டும், கட்டுபாடு வேண்டும். அதை மகிழ்வோடு ஏற்று மனம் நினைக்க வேண்டும். முழுமையை உணர என்னுள் உதிக்கும் எண்ணங்களை எனக்குள் கட்டுபடுத்த வேண்டும் என்று ஒர் எண்ணம் போதனையாய் செவியில் ஒலித்து கொண்டிருக்கிக்க, காரை பார்க் செய்து விட்டு தெளிவில்லா விடையுடன் வீட்டை அடைகிறேன்.

மீண்டும் பல எண்ணங்களுடன் தொடரும் என் உளரல்கள் ....


No comments:

Post a Comment