பாகம் - 1
அலுவலகம் விட்டுச் செல்ல இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். மனம் யோசித்தது இன்று இரவு சமையல் பற்றி, ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் செல்ல மகளின் முகம் என் கண்முன் நிற்க, காலையில் நடந்த சம்பவம் என் நினைவுகளில். நேற்று இரவு தூக்கம் தள்ளி போனதால் காலையில் எழுந்திருக்க முடியவில்லை. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது, சாப்பிட மறுக்கும் மகள், மதிய உணவு எடுத்து வைக்க வேண்டும், வேறு உடை மாற்றி அவளுக்கு தலை சீவ வேண்டும். நேற்று தாமதமாகச் சென்றதால், மேலாளர் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. ஒத்துழைக்க மறுத்ததால் ஓங்கி ஒரு அடி அவள் முதுகில் விளத் தேம்பிக் கொண்டே என்னை கட்டி அணைக்கிறாள்.யார் மீது வரும் அச்சமோ கோபமோ எதிர்க் கொள்ள இயலாத இந்த பிஞ்சுமன் மீது பாய்கிறது. இப்போது நினைத்து வருந்துகிறேன். குறைகள் யாவும் என்னிடம் இருக்க கோபம் மட்டும் உன்னிடம். கண்கள் கலங்குகின்றன, என் செயலை எண்ணி வெட்கம் கொள்கிறேன். மணி 5.00 யை எட்டியது, கார் சாவியை எடுத்து கொண்டு கையில் ஒரு சாக்லைட்டுடன் கிளம்புகிறேன் மகளை சமாதானம் செய்ய மீண்டும் ஒரு தவறு என் செயலில். அவள் கேட்கும் போது ஜங்க் உணவான இந்த சாக்லைட் என் சுயநலத்திற்கு நல்லதாகிறது. நினைத்து கொள்கிறேன், நான் செய்யும் எந்த செயலில் சுயநலம் இல்லை. விரல்விட்டு கூட எண்ண முடியவில்லை ஏன்னென்றால் எண்ணுவதற்கு ஒன்றும் இல்லை. என் குழந்தை என்னிடம் என்ன கற்றுக் கொள்கிறது? நினைத்து பார்த்து விம்முகிறேன்.
டேக்கேர் வந்துவிட்டது, 5 வயது வரை பாலூட்டி தாலாட்டி வளர்த்த காலம் போய் 2 வயதில் பள்ளி செல்லும் நிலமை இந்த கால குழந்தைகளுக்கு. ஆவலுடன் உள்ளேச் செல்கிறேன். கள்ளம் கபடமற்ற குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து "டோரா கார்ட்டுன்" பார்த்து கொண்டு இருக்கின்றன. அதில் வரும் ஷ்வைப்பர் எனும் நரியைக் கண்டு முகம் சுளிக்கின்றன. எங்கோ படித்ததை நினைவில் கொள்கிறேன் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். வாழ்வில் சிறந்த பண்பாடுடையவன் மிகுந்த ஒழுக்கமுடையவன் திரைப்படத்தில் வில்லனாகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான். கதாநாயகன் கடைந்தெடுத்த அயோக்கியனாய் இருந்தும் கன்னியவான் ஆகின்றான். நம் மனம் செயல்களை, காட்சிகளை எடுத்துக் கொள்ளும் விதம் கண்டு வியப்படைகின்றேன்.
உள்ளுக்குள் அன்பும், பாசமும் கொட்டிக்கிடந்தும் நான் வெளியில் நடக்கும் விதம் என் மகள் மனதில் என்னை வில்லனாக்கும். என் மகளிடம் கதாநாயகன் ஆக வேண்டும், திரைப்படத்தில் வருவது போல் அல்லாமல் உள்ளுணர்வால், உயர்ந்த செயலால். பெயர் சொல்லி அழைக்கிறேன், அம்மா என்று ஓடி வரும் அவள் சிரிப்பில் மயங்கி நிற்கிறேன். காலை நிகழ்ச்சியை மறந்து விட்டாள். இந்தவொரு நல்ல குழந்தையை என் செயல்களால் கெடுத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு மனதில் முள்ளாய் குத்துகிறது. என்னுள் உதித்த ஒரு ஜீவனுக்கே இந்த கதி என்றால், பிறருக்கு என்னிடம் இருந்து என்ன செல்கிறது? திருட்டு, கொள்ளை, கொலை தான் குற்றங்களா? நானும் தவறு செய்கிறேன். சமுதாயத்திடம் திருடுகிறேன், பலர் உள்ளங்களைக் காயப்படுத்துகிறேன், நல்லுணர்வுகளை கொலை செய்கின்றேன்.
வீட்டிற்கு வந்தாயிற்று. பால் குடுத்து விட்டு இரவு உணவை செய்ய ஆரம்பிக்கிறேன். அவளோ ஓடி ஆட வேண்டிய வயதில் துணையின்றி தொலைக்காட்சியில் மூழ்குகிறால். என்னை சமைக்கும் வரை தொந்தரவு செய்யாதிருந்தால் சரியென்று வேலையை ஆரம்பிக்கிறேன். பாத்திரங்களை கழுவி, தேநீர் போட்டு, சாதம் வைத்து ஒரு கூட்டு, குழம்பு வைத்தாயிற்று. மணி 7.30 சாதம் கலந்து எடுத்துக் கொண்டு ஊட்ட செல்கிறேன். வழக்கம் போல் மறுக்கும் அவள். விளையாட்டு காட்டி, கொஞ்சியும் மிரட்டியும் ஊட்டி முடிக்கிறேன். அவர் வந்தாயிற்று, இருவரும் சேர்ந்து இரவு சாப்பாட்டை முடித்து, மீண்டும் ஒதுங்க வைத்து விட்டு வருவதர்க்குள் உறங்கி போகிறாள். வேலையின் அலுப்பு தலை வலிக்கின்றது. ஒரு கப் டீயுடன் சிறிது TV பார்க்கிறேன். அவர் வழக்கம் போல் லேப்டாபில் உலகச்செய்திகளை ஆராய்கிறார். மீண்டும் இரவு தூக்கம் தள்ளி போகிறது. வார நாட்களில் நேரம் இல்லாதது போன்று ஒரு உணர்வு. சனி, ஞாயிறு நன்றாய் ஓய்வு எடுக்க வேண்டும். வெள்ளி இரவே துணி துவைத்து மடித்து வைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே தூங்கி போகிறேன்.
தொடரும்..........
அண்மையில் எங்கோ படித்த ஞாபகம்,
ReplyDelete//மூலையில் இருந்த எறும்பைக்
கால்களால் நசுக்குகிறேன்
அமைதியாய் என்னைக் கவனித்தவாறே
என் குழந்தைகள்!//
உங்களின் பதிவு வரிகளும் அதை நினைவுபடுத்திச் செல்கின்றன.
நன்றாக எழுதுகிறீர்கள்! தொடர்ந்து எழுதவும்!!
தகுந்த தலைப்பு. இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்கிறோம்
ReplyDeleteமிக்க நன்றி ரோஜா.
ReplyDeleteமிக்க நன்றி நம்பி.
ReplyDelete