Wednesday, December 24, 2008

மறக்க நினைத்த தருணம்

மறக்க நினைத்த தருணம்

பளபளக்க மஞ்சள் பூசி
பத்து பைசா திலகமிட்டு
படியவைத்த பிண்ணலிட்டு
கோடித் துணி பட்டுடுத்தி
கூந்தல் நிறை பூ முடித்து.............

அடங்காத கால்களுக்கு
அழகாய் சிறு கட்டுமிட்டு
அருகில் அமர்ந்து ஓலமிடும்
அன்பான உறவு கூட்டம்!!!!
எட்டி நின்று ரசிக்கின்றேன்
கண்டிராத என் அழகை.............

செல்வம் மிகு வீட்டை விட்டு
சொத்து பத்து சுகத்தை விட்டு
சொந்தம் பந்தம் எல்லாம் விட்டு
மலர் மாலை மழை தூறப்
பனையோலை தேர் தூக்கப்
பவனி வரப் போகின்றேன்.............

பாராட்டி வளர்த்தப் பொண்ணு
பாலூத்த, போறான்னு
சீராட்டி வளர்த்தப் பொண்ணு
சிறப்புடனே, போறான்னு
மூதாட்டி ஆராரோ என்
முடிவாகிப் போகின்றேன்.............

வெட்டியான் விறகடுக்க
வெண்பானை நீருடைக்க
வாய்கரிசி பசியாற்ற
பொன் ஜுவாலைத் தீமூட்ட
ஒப்பாரி பாட்டு சத்தம்
ஓய்வெடுக்கப் போகின்றேன்.............

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி
நான் அடங்கிப் போக
போடாத வேஷமெல்லாம் போட்டுத்
தான் கலஞ்சி போக
புரியாத பாதையில தனில்
புறப்பட்டு போகின்றேன்.............

சுருங்க நெற்றி சோகப் பார்வை
படிந்த நரை தளர்ந்த நாடி என
விடைகொடுத்துச் செல்ல நான்
மண்ணுலகில் வாழ்ந்த மட்டும்
மறக்க நினைத்த தருணம்
இந்த முடிவான மரணம்.............


2 comments: